திண்டுக்கல்லில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

232 0

திண்டுக்கல்லில் போலீஸ் குடியிருப்பு பகுதியிலேயே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் – திருச்சி சாலையில் சீலப்பாடி போலீஸ் குடியிருப்பு முன்புறம் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு பெரும்பாலும் போலீசார் மற்றும் வணிகர்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்வது வழக்கம்.

இன்று காலையில் பணம் எடுக்க ஒரு வாடிக்கையாளர் வந்தபோது ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பகுதி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

யாரோ மர்மநபர்கள் எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றது தெரியவரவே தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். போலீஸ் குடியிருப்பு பகுதியிலேயே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே பகுதியில்தான் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அலுவலகமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.