தேசிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்காமையின் காரணமாகவே தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை நாடி தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களில் அதன் தேவைக்கு ஏற்பவே செயற்படும். மாறாக இலங்கையின் நன்மையைக் கருத்திற் கொண்டு செயற்படாது என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்ற போது சர்வதேச தலையீடுகள் காணப்பட்டமை இரகசியமல்ல. இலங்கையின் அரச தலைவர்களே அவ்வாறான தலையீடுகளுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
சர்வதேச தரப்பினர் ஒவ்வொருவரையும் பற்றிக் கொண்டு எவ்வாறு பயனைப் பெற்றுக் கொள்வது என்பதே எமது வெளிநாட்டு கொள்கையாகக் காணப்படுகிறது. தேசிய சொத்துக்களை விற்றாவது சர்வதேசத்தை திருப்திப்படுத்தி தற்காலிக தீர்வினைப் பெற்றுக் கொள்வதே தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையாகவுள்ளது.
இவ்வாறு இடம்பெறும் போது நிச்சயம் சர்வதேச தலையீடுகள் காணப்படும். தற்போது வெளியுறவுகள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா சென்றுள்ளார். அதற்கு முன்னர் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியா சென்றார். அரசாங்கத்தினால் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாதபோது , தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றுக்கு கோரிக்கை விடுத்துள்ள போதிலும் , நீண்ட காலமாக அதற்கான வாய்பளிக்கப்படாத நிலையில் , அவர்கள் மாற்று வழியில் தீர்வுகளைக் காண வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிலும் இதுவே இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

