ராமானுஜர் சிலை திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

150 0

ராமானுஜர் வாழ்க்கை சாரத்தை எடுத்துச் சொல்லும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தொலைக்காட்சி தொடருக்கு கதை வசனம் எழுதியுள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமானுஜர் சிலை திறப்புக்கு நேரில் அழைப்பு விடுத்த திரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
இராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்காக எனது மரியாதை கலந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
இந்த சீரிய தருணத்தில் இராமானுஜர் அவர்களின் சமத்துவ குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக நம் நாடு வளர்ச்சி பெற தற்போது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தி.மு.க. தலைவராகவும் தன் வாழ்நாளெல்லாம் சமத்துவத்துக்காக பாடுபட்டவர் தலைவர் கலைஞர் என்று சுட்டிக்காட்டுவது எனது கடமையாகும்.
ராமானுஜரது வாழ்க்கையின் சாரத்தை எடுத்து சொல்லும் வகையில் அவர் ஒரு தொலைக்காட்சி தொடருக்கு கதை வசனம் எழுதினார். அவரது இலக்கிய, திரைப்படைப்புகளில் இதுவே இறுதியானதாகும்.
அதே நேரத்தில் எந்நாளும் உயிர்ப்புடன் இருந்து அடுத்து வரும் தலைமுறைகளிடம் குறிப்பாக, நம் நாட்டின் இளைஞர் திரளிடம் இராமானுஜர் என்னும் மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதியின் வாழ்வையும் பணிகளையும் கொண்டு செல்லும் படைப்பாக அது அமைந்திருக்கிறது.
கலைஞர் அவர்களின் அடியொற்றித்தான் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு தற்போது நடைபெற்று வருகிறது என்பதனையும் நான் இத்தருணத்தில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இராமானுஜர் பரப்பிய சீர்த்திருத்தங்கள் எங்களது நெஞ்சுக்கும் நெருக்கமானவை தாம். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக எனது அரசு நியமித்து தமிழ்நாட்டின் கோவில்களில் கருவறையில் பூசை செய்வதில் சமத்துவத்தை உறுதி செய்துள்ளது.
தங்களது நிகழ்வு பெரும் வெற்றியடைய எனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும் இராமானுஜரின் சமத்துவ சிலையானது என்ற இந்த அடையாளம் தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.