திண்டிவனம் அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

287 0

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் 2 சிறுமிகளையும் மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆச்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் ஜெயகிருஷ்ணன் (வயது 29). இவருக்கும். மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் தை மாத இறுதியில் திருமணம் நடைபெறுவதாக சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் விழுப்புரம் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சமூக நல ஆலோசகர் விமலா, மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர், சைல்டுலைன் உறுப்பினர்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு அறிவுரை வழங்கி நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இதேபோல் மயிலம் அருகே கொரலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் பிரசாந்த் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைனுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சிறுமியின் வீட்டுக்கு சென்று சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 2 சிறுமிகளையும் மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.