பண்ருட்டி அருகே 30 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்ற தகவல் அறிந்ததும் தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவாமூர் கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமாத்மா. அவரது மனைவி ஆனந்தி இவர்கள் ஆடு வளர்க்கும் தொழில் செய்கின்றனர்.
இவர்களுக்கு சொந்தமாக 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளது. நேற்று வழக்கமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பின்பு இரவு 10 மணி அளவில் பட்டியில் அடைத்தனர். இரவு 11 மணி அளவில் பட்டியில் இருந்த ஆடுகள் கத்தியது. அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவியும் ஆடுகள் அடைக்கப்பட்டு இருந்த பட்டிக்கு சென்றனர். அப்போது 30 ஆடுகள் இறந்து கிடந்தது கண்டு பதறிபோனார்கள். இந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்துகொன்று உள்ளது.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு செட்டிபாளையம் கால்நடை டாக்டரை வரவழைத்து ஆடுகள் இறப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இந்த சம்பவத்தால் பரமாத்மா குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

