ஐ.நா அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும்

247 0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக  இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான இன்றைய (01) சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் விடயங்கள் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம். 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கை சம்பந்தமாகவும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக நேர்மாறாக நடைபெறுகின்ற விடயம் தொடர்பில் பேசியுள்ளோம்.

“இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும்போது, இலங்கைக் கடற்படை அதனைத் தடுக்காமல் அலட்சியமாக செயல்படுவது தொடர்பாகவும் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்ட பெண்களுக்கு வரும் மோசமான பழி வாங்கல் சம்பந்தமாகவும் எடுத்துரைத்துள்ளோம்.

“தென்னிலங்கை சூழல் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உரிமை மீறல் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.

“அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிய அம்மையாரிடம் கடந்த அறிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். அரசாங்கம் புதிதாக ஆட்சிக்கு வந்ததால் அவர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்க வேண்டும் எனக் கூறினார். ஆனால், இந்த முறை அறிக்கை கடுமையானதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்” என்றார்.