வரட்சியினால் யாழில் 17,265 குடும்பங்கள் பாதிப்பு

259 0

dry_land_001_mini-720x4801வரட்சி காரணமாக யாழ்.மாவட்டத்தில் 8,160 ஹெக்ரெயர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட பயிர்கள் அழிந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் 17,265 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரட்சி மீட்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போதே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில்இவ்வருடம் 10,419 ஹெக்ரயரில் நெல் பயிரிடப்பட்டது. இதில் 8,120 ஹெக்ரயர் பரப்பளவில் பயிர்கள் அழிவடைந்துவிட்டன. இதனால் சுமார் 16,765 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

மேலும் இம்முறை 212 ஹெக்ரயரில் மிளகாய்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 ஹெக்ரயர் அழிவடைந்துள்ளது. இதனால் 367 குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.

இதேபோன்று 314 ஹெக்ரயரில் மேற்கொள்ளப்பட்ட வெங்காய செய்கையில், 8 ஹெக்ரயர் அழிவடைந்துள்ளது. இதனால் 82 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல், தானியங்கள், நிலக்கடலை, கிழங்குவகை, மரக்கறி உட்பட ஏனைய பயிர்கள் சுமார் 835 ஹெக்ரயரில் பயிரிடப்பட்டிருந்தது.

இதில் 5 ஹெக்ரயர் அழிவடைந்துள்ளது. இவ்வழிவுகளால் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் யாழ்.மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.