கூட்டணி பேச்சுவார்த்தையில் அமைச்சரை ஒருமையில் பேசிய ஜோதிமணி எம்.பி.யால் பரபரப்பு

247 0

குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கரூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வார்டு ஒதுக்கீடு குறித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி மற்றும் மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

முதலில் அரவக்குறிச்சி பேரூராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது ஒரு வார்டு மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு அரவக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிவண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஜோதிமணி எம்.பி.யை கண்டித்தார். ஒரு அமைச்சரை இப்படி பேசலாமா? என்று கேட்டார்.

அப்போது இந்த கூட்டத்தில் இருந்து ஜோதிமணி எம்.பி. வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.