13 ஐ கோருவது தமிழர் தேசத்தின் இறைமை மீது கொள்ளி வைக்கும் மாபாதகச் செயல்!

305 0

13 ஐ கோருவது தமிழர் தேசத்தின் இறைமை மீது கொள்ளி வைக்கும் மாபாதகச் செயல்! – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

ஊடக அறிக்கை
29.01.2022

13 என்பதே புலி நீக்க அரசியல் தான்! இங்கு புலி நீக்கம் என்பது தமிழ்த் தேசிய நீக்கத்தையே குறிக்கிறது. ஆகவே 13 ஐ அரசியல் தீர்வாக சில தமிழ் அரசியல் கட்சிகள் கோருவதானது, தமிழ்த் தேசிய அரசியலை குறி வைத்து தாக்கும் ஒரு நிகழ்ச்சிநிரல்!

ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இந்திய – இலங்கை உடன்படிக்கையும் அதன் விளைவான 13ஆவது திருத்தச்சட்டமும் ஒரு நிரந்தர பாதுகாப்பான உறுதியான உத்தரவாதமான அரசியல் தீர்வாக அமையாதமையினாலும், அதில் போதாமைகளும் – குறைபாடுகளும் இருந்தமையினாலும் தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மூன்றாம் தரப்பாகிய இந்தியப் பேரரசுடன் ஆயுத மோதலைச் செய்யும் ஒரு வரலாற்றுப் பெரு நிகழ்வுக்கு இட்டுச் சென்றது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனமும் இதற்கு துலக்கமான ஒரு சாட்சி!

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான அரசியல் தீர்வை முன் வைக்காமையினால் இனப்பிரச்சினை ஆனது 2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையில் போய் முடிவடைந்திருக்கிறது. ஆகவே தமிழ் இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் உப்புச்சப்பற்ற அதே 13 ஐ ஒரு அரசியல் தீர்வாக சில தமிழ்க் கட்சிகள் கோருவதானது, சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை ஏற்றுக் கொள்வதாகவே பொருள் கொள்ளப்படும். தமிழ் இன அழிப்புக்கு ஊக்கமும் – சட்ட ஏற்பாடும் அளித்த, அளித்துக் கொண்டிருக்கிற ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அங்கீகாரம் வழங்கும் ஒரு செயலாகவே இது பார்க்கப்படும். இந்த நடவடிக்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்த தமிழ்க் கட்சிகள், “13 க்கு கீழே இறங்கி வரவில்லை. 13 க்கும் அப்பால் மேலால் சென்று எதையோ கேட்கிறோம்.” என்று தமிழ் மக்களுக்கு கதை கதையாய் காரணங்கள் பல கூறலாம். ஆனால் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினராகிய நாம் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துவது யாதெனில், இந்தக் கட்சிகள் எல்லாமே சமஷ்டி கோரிக்கையை முன் வைத்தே நடைபெற்ற தேர்தல்கள் சகலவற்றிலும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்டன.

அப்படி ஒரு புரட்சிகர மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டு விட்டு, சமஷ்டி மற்றும் பொதுசன வாக்கெடுப்பு பற்றிய உரையாடல்களையும் அதற்குரிய முன்னாயத்த நகர்வுகளையும் செய்யாமல், அதைத் தவிர்த்து பொருத்தமே இல்லாத காலத்தில் தேவையே இல்லாத 13 ஐ நோக்கி ஓடுவதானது, அரசியல் தீர்வுக்கு சமஷ்டித் தீர்வை ஒரு பெரும் ஆணையாக வழங்கிய தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள நம்பிக்கைத் துரோகம் ஆகும். இனப்படுகொலைக்கு பரிகார நீதியையும், அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பையும் கோரி நிற்கும் தமிழர் தேசத்தின் இறைமையின் மீதும், தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளின் மீதும் கொள்ளி வைக்கும் மாபாதகச் செயலாகும்.

தேசங்கள் எங்கும் விடுதலைக்காகப் போராடிய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கான நீதி என்பது காலம் தாழ்த்தி தான் கிடைத்திருக்கிறது. இது புவிசார் அரசியலில் தவிர்க்கப்பட முடியாத ஒரு விளைவு. ஆனால் விடுதலையடைந்த அந்தந்த நாடுகளின் தேசிய இன மக்கள், தமக்கு நீதியாக – தீர்வாக என்ன வேண்டும்? என்ற அந்த ஒற்றைக் கோரிக்கையில் மாத்திரம் சமரசத்துக்கு இடம் கொடாமலும், சலுகைகளுக்கு விலைபோகாமலும் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்கள் என்பதே உலக வரலாறு. அதுவே அவர்களின் விடுதலை வரலாறு. ஆகவே இனப்படுகொலைக்கு உள்ளாகி விடுதலையை வேண்டி நிற்கும் தமிழ்த் தேசிய இன மக்களும் தமது கோரிக்கையில் தளம்பாமல், நழுவாமல் உறுதியாக இருந்தார்களா? என்றே உலக சமூகம் பார்க்கும்.

தமிழர் தாயகத்தின் புவிசார் இருப்பிடம் காரணமாக இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை சர்வதேச மயப்பட்டிருக்கிறது. இப்போது எல்லோருக்கும் தமிழ் மக்கள் தேவைப்படுகின்றார்கள். எல்லா வெளியரசுகளும் தமிழ் மக்களை நோக்கி வருகின்றன. அப்படி வரும் நபர்களுக்காக தமிழ் மக்கள் தமது தமிழ்த் தேசிய கொள்கை கோட்பாட்டை முகத்துக்கு முகம் மாற்ற முடியாது. தமிழ் மக்களின் பேரபலம் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் நபர்களுக்காகவும், அந்த நபர்களின் முகஸ்துதிக்காகவும், தமது தனிப்பட்ட நட்புகள் நலன்கள் தேவைகளுக்காகவும் சில தமிழ் அரசியல் கட்சிகள், சத்திய வேள்வியில் ஆகுதியாகிய மாவீர ஆத்மாக்களின் ஒப்பற்ற தியாகங்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட தமிழ் மக்களின் ‘தாயகம் தேசியம் சுயநிர்ணயம்’ கோட்பாட்டை அடமானம் வைக்கும் பச்சோந்தி குணத்தையும், சுயநலவாதப் புத்தியையும் வெளிக்காட்டத் தொடங்கியுள்ளன.

தமிழர் தேசம் ஒன்றின் அங்கீகாரத்துக்காக ஆகப்பெரிய விட்டுக்கொடுப்புகளைச் செய்யவும், அளவிட முடியாத அர்ப்பணிப்புகளைச் செய்யவும் தயாராகவிருந்த ஒரே விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே! என்பது தான் ஈழ வரலாறு. ஆகவே நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையோடு போர் நிறுத்தக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்துக்கான முயற்சிகளின் போது, தாயகம் – தமிழகம் – புலம்பெயர் சமூகம் என்று இம்முக்கூட்டுப் பிணைப்பும் இணைந்த துறைசார் நிபுணர்கள், புலமையாளர்களால் ஒக்ரோபர் 31 2001 இல் முன்வைக்கப்பட்ட அனைத்துலக சமூகத்தால் இராஜிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபு” [Interim Self- Goberning Authority – ISGA] என்றொரு அருமையான தீர்வுத் திட்டம் தமிழர் கைவசம் இருக்கிறது.

தமிழ் மக்களின் கூட்டு உரிமை, கூட்டு இருப்பு, கூட்டு அபிலாசை, கூட்டு உளவியலை வெளிப்படுத்தும் இந்த வரைபுக்காக மிகப்பெரிய விலையை தமிழர் தேசம் கொடுத்திருக்கிறது. ஆகவே இதனை ஒரு துருப்புச் சீட்டாக கொண்டு தான், தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யப் புறப்பட்டுள்ளதாகக் கூறும் தமிழ்த் தேசிய கட்சிகள் மேல்நோக்கி முன்நகர வேண்டுமே தவிர, அதனை நிராகரித்து விட்டு அரசியல் தீர்வுக்கான செயல்முனைப்புகளில் கீழிறங்கி ஈடுபட நினைப்பவர்கள் யாவரும், தமிழ்த் தேசத்துக்கும் அதன் இறைமைக்கும் எதிரான துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள்.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

தலைவர் கோ.ராஜ்குமார் (0094 77 854 7440)
செயலாளர் தி.நவராஜ்,
ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா