ஏமன் மீது வான்தாக்குதல் – பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரிப்பு

210 0

ஏமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
சவுதி கூட்டுப்படைகள் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தபோதும், அந்த படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது ஏவுகணைகளை வீசியும், டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்
கடந்த 17-ம் தேதி அபுதாபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் டிரோனை கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சவுதி கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.
இதற்கிடையே, ஏமன் நாட்டின் மேற்குப் பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகளுக்கான தடுப்பு மையத்தை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கட்டிடம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில், வான்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 87 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 200 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்