ஆழ்கடல் மீனவர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

292 0

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் எதிர்கொள்ளும் கடல் சார் அனர்த்த தவிர்ப்பு முன் ஆயத்தம் தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  (22) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆழ்கடல் மீனவர்கள் எதிர்கொள்ளும் கடல் சார் அனர்த்த தவிர்ப்பு முன்ஆயத்தம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், தென்கிழக்குப் பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பப் பீடத்துடன் இணைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆழ்கடல் மீனவர்கள் சுறாவளி மற்றும் கடல் அனர்த்தங்களின் போது அனர்த்த குறைப்பு தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

மேலும் ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பின் பின்னர் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் கூடுதலான கடலரிப்பு ஏற்பட்டு வருவதால்,மீனவர்களும், பொது மக்களும் பல இன்னல்களை  எதிர்நோக்கி வருவதாகவும் , இதனால் இக்  கடலரிப்பினை  நிரந்தரமாக தடுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளதாவும்,குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு தொலைத் தொடர்பு கருவி (ஜி.பி.எஸ்) பொருத்துவதற்கு நடவடிக்கை  எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்ஆழ்கடல் மீனவர்கள் அனர்த்த காலங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர்கள் காணாமற்போதல், அனர்த்த கால முன்னெச்சரிக்கை வானிலை அறிவிப்பு மற்றும் கடலில் ஏற்படும் விபத்துகள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மெஜர் ஜெனரல் சுதந்த ரணசிங், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.