2,580 பஞ்சாயத்து, 25 நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

260 0

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் தடுப்பூசி போட்டு கொண்டதே ஆகும். இதுவரையில் முதல் தவணை 89 சதவீதமும், 2-ம் தவணை 65 சதவீதமும் போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 19-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.

சென்னையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மெகா தடுப்பூசி போடும் முகாம் பணிகள் தொடர்ந்து கடந்த 19 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இது வரை 3 கோடியே 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் முதல் தவணை, 2-ம் தவணை, 15 வயதுக்கு மேற்பட்டவர் சிறுவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தகுதியானவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

சிறுவர்களுக்கு இதுவரை 25 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 76 சதவீதமாகும். இதுவரையில் தமிழகத்தில் 9 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 53 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஊராட்சி பகுதிகளை பொறுத்தவரை 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியை பொறுத்தவரை 25 நகராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

மெகா தடுப்பூசி முகாம்

 

சென்னையில் முதல் தவணை 94.11 சதவீதமும், 2-ம் தவணை 74.11 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் தடுப்பூசி போட்டு கொண்டதே ஆகும். இதுவரையில் முதல் தவணை 89 சதவீதமும், 2-ம் தவணை 65 சதவீதமும் போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாத 60 வயது தாண்டியவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் தொற்று பரவி உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. இது போன்ற சிறப்பு முகாம்கள் எந்த மாநிலத்திலும் நடத்தப் படவில்லை.

எனவே சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் 37 சதவீதம் பேர் தடுப்பூசி போடாமல் இன்னும் உள்ளனர். அவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட அழைத்து வர ஏற்பாடு நடக்கிறது.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 2-ம் தவணை தடுப்பூசி ஒரு கோடி பேருக்கு போடப்பட வேண்டும். 3 தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் உயிரிழப்பு இல்லை. அதனால் உயிரிழப்பை தவிர்க்க தடுப்பூசி அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனாலும் உயிரிழப்பு 25, 30 பேர் என்ற அளவில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா எம்.எல்.ஏ., சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ் ணன், துணை ஆணையர்கள் சிம்ரன்ஜீத், மணிஷ், பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.