உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் – பேராசிரியர் சமன் தர்மகீர்த்தி எச்சரிக்கை

158 0

பெரும்போக விவசாயத்தில் இம்முறை நெல் விளைச்சல் 50 சதவீதத்தினால் குறைவடையும். முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உரிய தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையினை எதிர்க்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை பேராசிரியர் சமன் தர்மகீர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெரும்போக விவசாயத்தில் சேதன பசளை பாவனையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு,விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளமை உள்ளிட்ட காரணிகளினால் பெரும்போக விவசாயத்தில் இம்முறை நெல் விளைச்சல் 50 சதவீதத்தினால் குறைவடையும்.

அநுராதபுரம்,மின்னேரிய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு நடவடிக்கையில் பல்வேறு விடயங்களை எம்மால் விளங்கிக் கொள்ள முடிந்துள்ளது. தற்போது பயிர்செய்யப்பட்டுள்ள நெற்செய்கையில் போசனை குறைந்துள்ளதையும், மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளதையும் நன்கு அவதானிக்க முடிகிறது.

விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உரிய தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையினை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.

நெற் பயிர்ச்செய்கை மாத்திரமல்ல சோளம்,தேயிலை உள்ளிட்ட அனைத்து பயிர்ச்செய்கைகளும் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளன.

தூரநோக்கமற்ற வகையில், அறிவியல் பூர்வமான தரப்படுத்தல்களுக்கு முன்னுரிமை வழங்காமல் விவசாயத்துறையில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களின் எதிர்தாக்கத்தை முழு நாடும் தற்போது எதிர்க்கொண்டுள்ளது.

சேதன பசளையினை பயன்படுத்துவதா அல்லது இரசாயன உரத்தை பயன்படுத்துவதா என்ற நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

சேதன பசளை திட்டம் சிறந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும் அத்திட்டத்தை முறையாக செயற்படுத்த உரிய வழிமுறைகள் கையாளப்படவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.