இயலுமானவரையில் முன்கூட்டியே பொருள்களைக் கொள்வனவுசெய்து சேமித்துவையுங்கள்-ஹிருணிகா

161 0

நாட்டுமக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டியெழுப்பப்பட்ட ‘ராஜபக்ஷ’ என்ற பெயரை, அரசியல் ரீதியில் எவ்வித முன்னனுபவமுமின்றி ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையாகச் சிதைத்திருக்கின்றார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டை மீளக்கட்டியெழுப்பக்கூடிய ஒரேயொரு மாற்றுத்தெரிவாக இருக்கின்ற சஜித் பிரேமதாஸவின் பக்கம் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்திருக்கின்றன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கனடா எச்சரித்துள்ள நிலையில், மக்கள் இயலுமானவரையில் முன்கூட்டியே பொருட்களைக் கொள்வனவுசெய்து சேமித்துவைப்பது உகந்ததாகும் என்று தெரிவித்துள்ள அவர், இத்தகைய நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய புதியதொரு ஆட்சிமாற்றத்திற்குத் தயாராகுமாறும் மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியவதாவது,

தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் நிர்வாகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லமுடியாது என்பது அண்மையகால நிலைவரங்களின் ஊடாக நன்கு தெளிவாகியிருக்கின்றது.

பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குத் தற்போது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள்.

இந்நிலை தொடருமானால், எதிர்வரும் மார்ச் மாதமளவில் அத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் மிகமோசமாகப் பாதிப்படைவார்கள்.

வரலாற்றைப் பொறுத்தமட்டில் எமது நாடு விவசாயத்தில் தன்னிறைவடைந்திருந்ததன் காரணமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் பசியோடு இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கு சிந்தனையற்ற தீர்மானங்கள் அதனை முற்றாக மாற்றியமைத்திருக்கின்றது. எந்தவொரு விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமின்றி இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சடுதியான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படைந்து, தேசிய உற்பத்தி குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட செயற்திட்டங்களைக் கடந்த இருவருடங்களில் செயற்படுத்தமுடியாவிட்டாலும் எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் கடந்த காலத்தில் அரிசி மாஃபியா, எரிவாயு மாஃபியா போன்றவற்றின் முன்நிலையில் ஜனாதிபதி மண்டியிட்டதுடன் மாத்திரமன்றி, தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

அவ்வாறிருக்கையில் அவர் எதிர்வரும் மூன்று வருடங்களில் கடந்தகால வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று எவ்வாறு நம்பமுடியும்? வெளிநாட்டில் எரிபொருள் நிரப்புநிலையத்தில் பணிபுரிந்த ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக்கினால், அவரிடமிருந்து இதனைத்தான் எதிர்பார்க்கமுடியும்.

நாடளாவிய ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டியெழுப்பப்பட்ட ‘ராஜபக்ஷ’ என்ற பெயரை, அரசியல் ரீதியில் எவ்வித முன்னனுபவமும் இல்லாமல் ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையாகச் சிதைத்திருக்கின்றார்.

எதிர்வருங்காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும் ஆட்சிபீடமேறமுடியாத நிலையை அவர் தோற்றுவித்திருக்கின்றார். தனக்கெதிரான வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குகின்றாரே தவிர, நாட்டுமக்கள்மீது அவருக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று நாம் ஏற்கனவே கூறினோம்.

இருப்பினும் அவரை ஜனாதிபதியாக்கியதன் விளைவாக நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை இப்போது நாமனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக எதிர்வருங்காலங்களில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று சில அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள். ஆனால் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பில், இலங்கையில் மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் தேவையான பொருட்களை முன்கூட்டியே கொள்வனவு செய்துவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே எமது நாட்டின் பிரஜைகளும் இயலுமானவரையில் பொருட்களை முன்கூட்டியே கொள்வனவுசெய்து சேமித்துவைக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கமுடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் எந்தவொரு எதிர்க்கட்சியும் எமது கட்சியைப்போன்று நாட்டிற்கு சேவையாற்றியதில்லை.

அதேவேளை மறுபுறம் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏனைய சிறிய நாடுகளில் நிகழக்கூடிய அரசியல் ரீதியான நகர்வுகள் மற்றும் ஆட்சிமாற்றங்களை உன்னிப்பாக அவதானித்தவாறு இருக்கும். அந்தவகையில் தற்போது அவற்றின் கவனம் எமது பக்கம் திரும்பியுள்ளது.

அண்மையில் ‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ செயற்திட்டத்தினால் ஈர்க்கப்பட்ட சீனா, அதற்கென இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஊடாகக் குறிப்பிடத்தக்களவிலான நிதியுதவியை வழங்கியிருந்தது. அதேபோன்று இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கடனுதவிக்கான கோரிக்கையை முன்வைத்தபோது, அதுகுறித்து இந்திய அதிகாரிகள் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடினர்.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நாட்டுமக்கள் மிகக்குறுகிய காலப்பகுதியிலேயே தற்போதைய அரசாங்கம் தொடர்பில் அதிருப்தியடைந்திருக்கும் நிலையில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையே அனைவரும் அதற்கான மாற்றுத்தெரிவாகக் கருதுகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

ஆகவே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதியதொரு ஆட்சிமாற்றத்திற்குத் தயாராகுமாறு நாட்டுமக்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.