பள்ளிகளை மேலும் 2 வாரம் மூட நாளை ஆலோசனை – தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

270 0

தமிழ்நாட்டில் மற்ற வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வந்தாலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்துவிட்டது. நேற்று மட்டும் 23,989 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 691 பேர் குழந்தைகள் ஆவர். தற்போது 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா மேலும் பரவாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாளையொட்டி ஏராளமான பேர் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளதால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்னும் கொரோனா அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் பள்ளிக் கூடங்களை முழுவதுமாக இந்த மாதம் முடிய மூடி விட்டனர்.
தமிழ்நாட்டில் மற்ற வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வந்தாலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
10, 12,-ம் வகுப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) ‘ரிவி‌ஷன் டெஸ்ட்’ நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் 19-ந் தேதி மாணவ-மாணவிகள் அனைவரும் பள்ளிக் கூடங்களுக்கு வர உள்ளனர்.
பள்ளி மாணவிகள்
தற்போது கொரோனா உச்சத்தில் உள்ளதால் இந்த சூழலில் மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்து செல்வது ஆரோக்கியமாக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவ- மாணவியர், ஆசிரியர் நலன் கருதி தமிழ்நாட்டிலும் இந்த மாதம் முழுவதும் ( 2 வாரம்) பள்ளிக்கூடங்களை மூடுவதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் பள்ளிக்கூடங்களை இந்த மாதம் முழுவதும் மூடுவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.