தமிழர்களின் உணர்வுகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்

394 0

201701182151441184_I-Expose-TN-peoples-feelings-with-PM-Modi-CM-Panneerselvam_SECVPFஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழர்களின் ஒட்டுமொத்தமான உணர்வுகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பேன் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இரண்டு நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டம் நேரம் செல்லச் செல்ல தீவிரம் அடைந்து கொண்டே வருகின்றது.

இதனையடுத்து, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்து இருந்தார். அதனை ஏற்று 14 பேர் கொண்ட போராட்டக்குழுவினர் முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

நாளை காலை 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்க உள்ளேன். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழர்களின் ஒட்டுமொத்தமான உணர்வுகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பேன்.

உரிய முறையில் உணர்வு பூர்வமான கோரிக்கைகளை தெரிவிப்பேன். போராட்டக் குழுவினர் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தனர். நான் அளித்த விளக்கங்களை கேட்டு அவர்கள் திருப்தி அடைந்தனர்.

மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மத்திய அரசுடன் சுமூகமாக உறவு இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையில் வாதாடி போராடி உரிமைகளை பெற்று வருகிறோம்.

நியாயம் கிடைக்கும் வரை சட்டப்பூர்வமான போராட்டம் தொடரும். போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.