சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும்- பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை

158 0

சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும் என்று பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுவை பிராணிகள் நல இயக்க தலைவரும், அரசு கால்நடை டாக்டருமான செல்வமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் மாட்டுப்பொங்கலின் ஒரு பகுதியாக விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் படையலிட்டு அதில் சர்க்கரை மற்றும் வெல்லம் கலந்து கொடுக்கிறார்கள். சர்க்கரை கலந்த பொங்கலை  உண்ணக் கொடுப்பதனால் மாடுகளுக்கு வயிற்று உபாதை ஏற்படும்.
வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்பட்டு செரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். இறுதியில் மாடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.  மேலும், மாடுகளின் வயிற்றில் நன்மை செய்யக் கூடிய நுண்ணுயிர் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை தடைசெய்கிறது.
இதனால், பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் உண்ணா மல் ஒரு மந்த நிலையில் தள்ளப் படுகிறது. நாளடைவில்  வயிற்றில் உள்ள இரைப்பை பெரிதாகி அருகில் உள்ள உறுப்புகளான நுரையீரலில் அழுத்தம் கொடுத்து அதை தள்ளுவதால் மாடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்த உயிர் இறப்பில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி விட்டு படைத்த பொங்கலை  குறைந்த அளவில் உண்ணக் கொடுக்க வேண்டும். பொங் கலை மறுநாள் வைத்து அது கொதித்த பின் கொடுக்க வேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.