சிறிலங்கா இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் தடை விதிக்க வேண்டும்!

118 0

இலங்கையில் இறுதிகட்ட போரின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின் கீழ் தடை விதிக்க வேண்டும் என்று 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

அதுமாத்திரமன்றி இவ்வாண்டு பிரித்தானியாவின் பேர்மிங்கில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய தனது அணியுடன் பிரித்தானியாவிற்கு வருகை தரும்பட்சத்தில், சர்வதேச சட்டவரம்பின் கீழ் அவரைக் கைதுசெய்து விசாரணையை ஆரம்பிப்பதொன்றே தற்போது பிரித்தானியா செய்யக்கூடிய மிகக்குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்றும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதுகுறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள், பிரித்தானிய தமிழ் பழமைவாதிகள் அமைப்பு, ஸ்ரீலங்கா கம்பெய்ன் அமைப்பு, பேர்ள் அமைப்பு, தடைவிதிப்பதற்கான தமிழர்கள், சுதந்திர ஜனநாயகவாதிகளின் தமிழ் நண்பர்கள் ஆகிய 7 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட விடயங்களை கூறியுள்ளது.