ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட் தாக்குதல்

30 0

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே இது போன்ற தாக்குதல்கள் முடிவுக்கு வரும் எனறு ஈரான் ஆதரவு போராளிகள் குழு அறிவித்துள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 2,500 வீரர்கள் அங்கு  முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து 4 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் மூன்று ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தின் எல்லைக்குள் விழுந்ததாகவும், மற்றொன்று அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள பள்ளியை தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒரு சிறுமியும் ஒரு பெண்ணும் காயமடைந்ததாக ஈராக் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் இதில் அமெரிக்க தூதரக பகுதி சேத விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. பாக்தாத்தின் டோரா பகுதியில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் ஈராக் இராணுவ தளபதி அபு மஹ்தி அல் ஆகியோர் அமெரிக்க ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதன் இண்டாம் ஆண்டு நினைவு தினத்தையாட்டி ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து முழுமையாக வெளியேறினால் மட்டுமே இது போன்ற தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான உயர் மட்ட அமெரிக்கத் தளபதி மரைன் ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்சி, கடந்த மாதம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,  அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதில் உறுதியாக இருக்கும் ஈரானிய ஆதரவு போராளிகள்,  அமெரிக்கா மற்றும் ஈராக்கிய ராணுவத்தினர் மீதான தாக்குதல்களை அதிகரிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.