பயணிகள் ஆவேசம் – புகையிரதங்கள் மீதும் தாக்குதல்

195 0

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினை தொடர்ந்து தூர புகையிரத போக்குவரத்து சேவை இரத்து செய்யப்பட்டதால் பொது பயணிகள் புகையிரத நிலையங்களில் பெறும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

தூரபிரதேச புகையிரத சேவைகள் தொடர்ச்சியாக பிற்போடப்படல்,சேவையில் நிலவும் பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு கோரி நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 24 மணிநேர திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எல்ல, நுவரெலியா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களை நோக்கி செல்லதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று காலை கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக காத்திருந்தனர்.

தூரபிரதேச பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை முழுமையாக இரத்து செய்யப்பட்டமை குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தூரபிரதேச புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரம் நேற்று இரவு கண்டி புகையிரத நிலையத்தில் இடை நிறுத்தப்பட்டதால் புகையிரதத்தில் பயணித்த பயணிகள் பெறும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டார்கள்.

நேற்று முன்தினம் கண்டி புகையிரத நிலையத்தில்  பயணிகளுக்கும், புகையிரத சேவையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினை தொடர்ந்து ஒரு தரப்பினர் புகையிரத பாதுகாப்பு பிரிவின் அறையின் கதவினை சேதப்படுத்தியுள்ளனர்.

பின்னர் பாதுகாப்பு தரப்பினர் கண்டி புகையிரத நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அரச பேருந்துகள் ஊடாக பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதம் கெக்கிராவ புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அடையாளம் தெரியாத தரப்பினர் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் யன்னல் கண்ணாடி, கதவு ஆகிய பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து எல்ல நோக்கி சென்ற புகையிரதம் பண்டாரவெல புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டதால் உள்ளுர் பயணிகள் உட்பட ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு தழுவிய ரீதியில் சுமார் 20 புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன.

புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டதனால் காலை அலுவலக புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் புகையிரத மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.