அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்ததற்கான காரணத்தை வெளியிட வேண்டும்

308 0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான காரணத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி இன்று தெரிவித்த்துள்ளது.

நியாயமான காரணத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க உள்ளூராட்சி சட்டத்தின் மூலம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான எந்த காரணத்தையும் அரசாங்கம் வெளிப்படுத்தத் தவறிவிட்டது

உள்ளூராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் மார்ச் 19, 2022 முதல் மார்ச் 19, 2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளினதும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்த காரணத்தையும் அரசாங்கம் குறிப்பிடவில்லை. ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிடுமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் முன் செல்ல அரசாங்கம் பயப்படுவதைத் தவிர வேறு எந்த காரணத்தையும் அவர்கள் காணவில்லை என்றும், கொவிட் தொற்றுநோயால் இந்த முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு இப்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளும் இப்போது திறக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், கொவிட் தொற்று நோயை அரசாங்கத்தால் காரணம் கூற முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.