கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பியோட முற்பட்ட வெளிநாட்டவர் யார்? – விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி

181 0

விமானப் படையின்  கமாண்டோ படையினர், பொலிஸார்,  விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் இணைந்து அவரை இவ்வாறு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என உடனடியாக வெளிப்படுத்தப்படாத நிலையில்,  விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் அபுதாபியில் இருந்து பாரிஸ் நகருக்கு  நேற்று ( 10)அதிகாலை 2.45 மணியளவில்  புறப்படத் தயாராக இருந்த இட்டிஹார்ட் விமான சேவைக்கு சொந்தமான ஈ.வை.265 எனும்  விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை  அதிகலை 1.00 மணியளவில் வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட குறித்த சந்தேகநபர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்த சீஷெல்ஸ் தேசிய கடவுச்சீட்டு தொடர்பில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர் எல்லை கண்காணிப்பு பிரிவின் தொழில்நுட்ப ரீதியிலான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர், குடிவரவு குடியகல்வு திணைக்கள  எல்லை கண்காணிப்பு பிரிவின்  அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவ்வாறு விசாரணை செய்யும் போது, திடீரென  சந்தேக நபர் அங்கிருந்து  தப்பியோடியுள்ளார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து விமான நிலைய சுங்கப் பிரிவின் ஊடாக ஓடியுள்ள சந்தேக நபர் அங்கிருந்து பாதுகாப்பு மதிலொன்றின் ஊடாக பாய்ந்து விமான நிலைய வெளியேறல் பிரிவுக்குள் பிரவேசித்து அங்கு கூரைப் பகுதியில் ஒழிந்துகொண்டுள்ளார்.

சந்தேக நபர் ஓடியதையடுத்து, அவரது நடவடிக்கை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில்  உடனடியாக தகவல்  கட்டுநாயக்க விமானப்படை முகாம், விமான நிலைய பொலிஸாருக்கும் பகிரப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே உடனடியாக விமானப்படையின் கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டு,  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்  கூரையில் மறைந்து, கூரை வழியே விமான நிலையத்திலிருந்து வெளியேறும்  பாதைக்கு சென்று, தப்பிச் செல்வதே நோக்கமாக இருக்கும் என அவரது நடவடிக்கைகளை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்ப்ட்ட சந்தேக நபரின் கழுத்து பகுதியில் 4693 எனும் இலக்கம் மிகத் வெளியே தெளிவாக விளங்கும் வகையில் பச்சைக் குத்தப்ப்ட்டிருந்தமை பாதுகாப்பு தரப்பின் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் சந்தேக நபர், வெளிநாட்டு சிறையிலிருந்து தப்பி வந்தவராகவோ அல்லது சர்வதேச அலவில் தேடப்படும் குற்றவாளியாகவோ அல்லது சர்வதேச பயங்கரவாத குழுவொன்றின்  உறுப்பினராகவோ கூட இருக்கலாம் என  பாதுகாப்பு தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்த வெளிநாட்டு சந்தேக நபர் தப்பியோடிய முறைமை, மதிலால் குதித்தமை, கூரையின் ஊடே தப்பிக்க முயன்றமை போன்றவற்றை வைத்து இந்த சந்தேகங்களை  விமான நிலைய பாதுகாப்பு தரப்பினர் முன் வைக்கின்றனர்.

இந் நிலையிலேயே கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமன நிலைய குற்றப் புலனய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளார்.