வாள்வெட்டு நபர் மானிப்பாயில் கைது!

269 0

கோப்பாய் மற்றும் கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மானிப்பாய், புதுமடத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்றும் அவரிடம் இருந்து கூரிய ஆயுதம் ஒன்று கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி கோப்பாய் மற்றும் கொக்குவிலில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.