முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மன நிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் ஊராட்சிக்குப்பட்ட நல்லூரிமேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி தனது மூத்த மகளை இழந்த வருத்தத்தில் இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தனது கணவரும் உயிரிழந்ததையடுத்து போதிய வருமானமின்றி தன்னுடைய மகன், 2-வது மகள் மற்றும் பேரக் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், 2-வது மகள் ஜோதிகாவிற்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சுகாதாரத் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஜோதிகாவை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதோடு, ஊராட்சி சார்பில் அவரது வீட்டில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையறிந்த அருகில் உள்ளவர்கள், ஜோதிகாவின் குடும்பத்தைச் சேர்ந்த யார் வெளியே வந்தாலும் அவர்களிடம் இருந்து விலகிச்செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால், அந்தக் குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளானதோடு, கொரோனா தொற்று தங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் வந்து விடுமோ, அதனால் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடுமோ என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டனர்.
இந்த அச்சத்தின் காரணமாக லட்சுமி, அவரது மகள் ஜோதிகா, மகன் சிபிராஜ் மற்றும் பேரன் ரித்தீஷ் ஆகிய 4 பேரும் சாணிப் பவுடரை உணவில் கலந்து சாப்பிட்டு, ஆபத்தான முறையில் அனைவரும் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயங்கிக் கிடந்ததாகவும், பின்னர் ஆம்புலன்சில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்தீஷ் ஆகியோர் உயிரிழந்ததாகவும், லட்சுமி மற்றும் சிபிராஜ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வந்துள்ளது.
கொரோனாவுக்கான மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையையும், அந்தச் குடும்பத்தில் உள்ளவர்களின் மன நிலையையும், அக்கம்பக்கத்தினரால் அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலையும், அவர்களுடைய பொருளாதார நிலையையும் ஆராய்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உதவி புரிவதும், ஆலோசனைகளை வழங்குவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஓர் அரசின் கடமை, இதைச் செய்ய அரசு நிர்வாகம் தவறுகின்றதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மன நிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மேற்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 என்ற அளவிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327 என்ற அளவிலும் இருக்கின்ற நிலையினை கருத்தில் கொன்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சில விலக்குகளையும், வழிகாட்டு நெறி முறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.
கொரோனா 3-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தினால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் நலம் பாதுகாக்கப்படுவதோடு அரசு ஊழியர்களை கொரோனா தொற்று பாதிப்பது கணிசமாக தடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே முதல்-அமைச்சர், அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

