மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி!

200 0

இந்தியப் பிரதமரின் கடித முயற்சிக்கு மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி கூறுகிறோம் ரெலோவின் ஊடகபேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திய பிரதமருக்கு அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோருவதன் மூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பகிர்ந்து மக்கள் முகம் கொடுத்திருக்கும் தற்போதைய பிரச்சினைகளில் இருந்து, மீட்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தோம்.

வடக்கு கிழக்கை மையப்படுத்திய கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் அந்த முயற்சியை முன்னெடுத்திருந்த பொழுது, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் பலத்தையும் கோரி நின்றோம். எவ்வித தயக்கமும் இல்லாது எமது முயற்சிக்கு நலமும் பலமும் சேர்க்கும் வகையில் நம்மோடு தோளோடு தோள் நின்று பயணிக்க முன் வந்தமைக்கு நன்றி கூறுகிறோம். இதனால் எமக்கு உத்வேகம் தந்துள்ளீர்கள்.

அனைத்து தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையான வரைபை தயாரிக்க முற்பட்ட போதும் எமது அடிப்படை கோரிக்கைகளான தாயகம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பவற்றில் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அதேநேரம் அதில் உங்களால் கையொப்பமிட முடியாத இக்கட்டான நிலையையும் நாங்களும் விளங்கிக் கொண்டோம். இருப்பினும் உங்களால் முன்வைக்கப்பட்ட மலையக மக்களின் கரிசனைகளையும் பிரதிபலித்துள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

எமது மக்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் இக்கட்டிலிருந்து எம் மக்களை மீட்க நாம் முற்பட்ட பொழுது எமது தரப்பிலிருந்து எம்மை விமர்சித்தும், எதிர்ப்புகளை வெளியிட்டும், கருத்துக்களை பதிவிட்டும் தடுக்கும் முயற்சியிலும் சுயவிளம்பரங்களை தேடுவதிலும் ஈடுபட்டிருந்த வேளையில் உங்களது நாகரீகமான நடைமுறை அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம்.

உங்களது அனைத்து முயற்சிகளிலும் எங்கள் ஆதரவு என்றும்போல் தொடர்ந்தும் இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அதே வேளை எம்மக்களின் விடிவிற்கான தொடர் பயணத்தில் நீங்கள் தொடர்ந்தும் எம்முடன் பயணிக்க விருப்புடன் கோரி நிற்கிறோம்.