எரிவாயு சிலிண்டர் மாஃபியாவின் பின்னணியில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களே இருக்கின்றன – ரோஹண பண்டார

197 0

நாட்டின் சில பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் சிலரால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சதி என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியிருக்கின்றார்.

இதன் பின்னணியிலுள்ள சதி எரிவாயு சிலிண்டர் மாஃபியாவை மையப்படுத்தியது என்பதுடன் ஆளுந்தரப்பிலுள்ள உறுப்பினர்களே அதற்கான தலைமைத்துவத்தை வழங்குகின்றார்கள். அதன் காரணமாகவே தற்போதுவரை இச்சம்பவங்களுடன் தொடர்புடைய எரிவாயு சிலிண்டர் நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டரா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாம் இதுவரை கண்களால் பார்த்திராத, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவு உரத்திற்காக நேற்றைய தினம் மக்கள் வங்கியின் ஊடாக 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றாமல் விவசாயிகளுக்கு அவசியமான உரத்தை உரியவாறு பெற்றுக்கொடுத்திருந்தால், நாடு பாரிய உணவுப்பொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது.

எதிர்வரும் சில தினங்களில் விவசாயத்துறை அமைச்சிலிருந்து விடைபெற்றுக்கொள்ளும் நிலையில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இருப்பதுடன், எதிர்வருங்காலங்களில் நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடும் என்பதைத் தற்போது அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளில் உள்நாட்டில் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத போதிலும், அந்நாடுகளில் உணவுப்பஞ்சம் ஏற்படவில்லை என்று ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றார்கள். முதலில் அந்த நாடுகளுடன் எமது நாட்டை ஒப்பிடமுடியுமா என்பது குறித்தும் வெளிநாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இயலுமை எமது நாட்டிற்கு இருக்கின்றதா என்பது குறித்தும் சிந்திக்கவேண்டும்.

அடுத்ததாக நாட்டின் சில பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் சிலரால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சதி என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியிருக்கின்றார்.

கொழும்பிலுள்ள ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக அங்கு பணிபுரிபவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் தற்போது எரிவாயு அடுப்பிற்குப் பதிலாக விறகு அடுப்பு பயன்படுத்தப்படும் நிலை தோற்றம்பெற்றுள்ளது.

எரிவாயு சிலிண்டர் இல்லாததால் அண்மைக்காலங்களில் பல ஹோட்டல்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. எரிவாயு கொள்வனவிற்காக தினந்தோறும் பலர் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எந்த சதியைப் பற்றிக் கூறுகின்றார் என்று புரியவில்லை.

இதன் பின்னணியிலுள்ள சதி எரிவாயு சிலிண்டர் மாஃபியாவை மையப்படுத்தியது என்பதுடன் ஆளுந்தரப்பிலுள்ள உறுப்பினர்களே அதற்கான தலைமைத்துவத்தை வழங்குகின்றார்கள்.

எரிவாயு சிலிண்டர் நிறுவனம் நட்டத்தில் இயங்கும்போது, அந்த நட்டத்தை ஈடுசெய்துகொள்வதற்கான மேற்கொள்ளப்பட்ட கலவைமாற்ற சதியின் விளைவாக இன்றளவில் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெருமளவான சேதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் நிறுவனத்திற்கு எதிராகத் தற்போதுவரை எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

எமது தொகுதியின் செயற்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றபோது வெளியே புலனாய்வுப்பிரிவினர் காத்திருந்தமையினை அவதானிக்கமுடிந்தது.

ஆகவே எரிவாயு சிலிண்டர் வெடிப்பு உள்ளடங்கலாக மக்களுக்குப் பாதிப்பையேற்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுக்குப் பின்னலேயே புலனாய்வுப்பிரிவினரை அனுப்பியிருப்பதுபோல் தெரிகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்கும்போது மக்கள் தமது மனதிலிருந்து தீர்மானங்களை மேற்கொள்ளாமல், நன்கு சிந்தித்து புத்தியின் ஊடாக தீர்மானமெடுக்கவேண்டும்.

அதேவேளை தேர்தலொன்றை நடாத்துமாறு அரசாங்கத்திடமும் கோரிக்கைவிடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.