வாழைச்சேனை பிரதேச சபையின் சுகாதார பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து அப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இன்று பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கிணங்க அரச காணியில் தற்காலிக கொட்டகை அமைத்துள்ளதை அகற்றுமாறு சபையின் பணியாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நேற்று (6) கொட்டகையை அகற்றும் போது அக்காணியில் கொட்டகை அமைத்தவர் வருகை தந்து கல்லினால் தாக்குதல் நடத்திய போது பணியாளர் எம்.குமாரவேல் என்பவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி சபை உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தாக்கப்பட்ட பணியாளருக்கு நீதி கோரி சபை உத்தியோகத்தர்களால் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்திடம் மகஜர் வழங்கப்பட்டதுடன், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர்வதுடன், பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கை இடம்பெறாது எனவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பணியாளரைத் தாக்கிய சந்தேத நபரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

