கடந்த ஆண்டில் நீலகிரியில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

369 0

நீலகிரி மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அதில் 15 குழந்தைத் திருமணங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி, பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21-ம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

இச்சட்டத்தின்படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர், பாதுகாவலர், மணமகன், மதத் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அமைப்புகள், திருமண தரகர் அனைவரும் குற்றம் செய்தவராக கருதப்படுகின்றனர்.

மேலும், இக்குற்றம் குழந்தை திருமணத்தில் ஈடுபடும் செயலானது பிடியாணையின்றி கைது செய்வது மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். 2 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை அல்லது ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக இருந்தால், மாவட்ட சமூகநல அலுவலரை 96559 88869 என்ற எண்ணிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 97153 10135 என்ற எண்ணிலும், சைல்டு லைன் அமைப்பினரை 1098 என்ற எண்ணிலும், ஒருங்கிணைந்த சேவைமையத்தை 99430 40474 என்ற எண்ணிலும், பெண்களுக்கான இலவச உதவி எண் 181லும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.