கோழிப்பண்ணைகளில் தினமும் 50 லட்சம் முட்டைகள் தேக்கம்

351 0

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியதாலும் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் அரசின் சத்துணவு திட்டத்துக்கும், கேரளம், கர்நாடகம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் முட்டைகள்  அனுப்பப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு போன்றவற்றால் முட்டையின் தேவை அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக முட்டை விற்பனை அதிகரித்து காணப்பட்டது. பிற மாநில வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை கொள்முதல் செய்தனர்.
அதே வேளையில் தமிழகத்தில் அய்யப்ப பக்தர்கள் விரதம், மார்கழி வழிபாடு போன்றவற்றால் முட்டை விற்பனை குறைந்து காணப்பட்டது.  முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.05 ஆகவே நீடித்தது.
இந்த நிலையில் தற்போது 3 நாட்கள் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சுமார் 50 லட்சம் முட்டைகள் பண்ணைகளிலும் குளிர்பதனக் கிடங்குகளிலும் தேக்கம் அடைந்துள்ளன. இதை தொடர்ந்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில் முட்டை தேக்கம், பொது முடக்கம் அமல் ஆகியவற்றால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என பண்ணையாளர்கள் வலிறுத்தினர். அதன் அடிப்படையில் 25 காசுகள் குறைக்கப்பட்டு கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. வரும் நாட்களில் பொது முடக்கம் கடுமையாகும் பட்சத்தில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இதேபோல கறிக்கோழி விற்பனையும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.97-க்கு விற்பனையான கறிக்கோழி தற்போது ரூ.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 13 விலை குறைந்துள்ளதால் விற்பனையாளர்களுக்கு வாரந்தோறும் ரூ.150 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்ல் இந்த விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. முட்டைக்கோழி விலை கிலோ ரூ.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக முட்டையின் தேவை வெளிச்சந்தையில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விலையும் சீராக இருந்தது. பண்ணையாளர்களுக்கும் ஓரளவு லாபம் கிடைத்தது. தற்போது கொரோனா பரவலால் பொது முடக்க அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
முட்டைகள் தேக்கம்
நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் இருந்து வட மாநிலங்களுக்கு 30 சதவீத முட்டைகள்தான் விற்பனைக்கு செல்கின்றன.  தமிழகம், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கு 70 சதவீதம் முட்டைகள் செல்கின்றன.  ஊரடங்கு அறிவிப்பால் வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயங்குகின்றனர். ஒரு லட்சம் முட்டை கெள்முதல் செய்யும் வியாபாரிகள் 50 ஆயிரமே  போதும் என்கின்றனர்.
இதனால் பண்ணைகளில் முட்டைகளின் தேக்கம் தவிர்க்க முடியாததாக உள்ளது. மற்றும் உற்பத்தி அதிகரிப்பால் லட்சக்கணக்கில் முட்டைகள் தேங்கி இருப்பதாக கூறப்படும் தகவல் தவறானவை.
ஊரடங்கின்போது மக்களின் ஆரோக்கியத்திற்கான கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும். கடைகளைத் திறக்க அனுமதி வழங்க வேண்டும்.