மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தரவான் கோட்டை பகுதியில், கூலித் தொழிலில் ஈடுபடும் பெண்ணொருவரின் வீட்டில், இன்று வியாழக்கிழமை(06) மதியம் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது.

இதனால், அவ்வீடு எரிந்து முற்றுமுழுதாக நாசமாகியுள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிமையில் வசித்துவரும் அப்பெண் பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். சம்பவத்தை அடுத்து விரைந்த கிராம மக்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.

மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

