தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் இருப்பதாக கூறினீர்கள். எந்த சூட்சுமம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்யப்போகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள் என்று அ.தி.மு.க. உறுப்பினர் வைத்திலிங்கம் கூறினார்.
சட்டசபையில் இன்று அ.தி.மு.க. உறுப்பினர் வைத்திலிங்கம் பேசியதாவது:-
கொரோனா பரவல் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்தவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
நாங்கள் ஏற்கனவே தொடங்கிய கிங்ஸ், வர்த்தக மையம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிறப்பு மையங்களை நீங்களும் அமைத்துள்ளீர்கள். புதிதாக மையங்கள் ஏற்படுத்தப்படுமா?
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளீர்கள். நீட் தேர்வு ரத்துக்கு அ.தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்.
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் இருப்பதாக கூறினீர்கள். எந்த சூட்சுமம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்யப்போகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள். ஏன் என்றால் மாணவ-மாணவிகள் நீட் தேர்வு குழப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தால் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பயிற்சிகளை நாம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

