குளுகுளு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு பெய்துவரும் எலும்பை நொறுக்கும் கடும் பனிக்கு 17 பேர் பலியாகியுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஓரிரு நாட்களாக நீடித்துவரும் கடுமையான பனிப்பொழிவால் இங்குள்ள கட்டிடங்கள், மரங்கள், வாகனங்கள் அனைத்தும் பனியால் மூடப்பட்டு வெண்ணிறமயமாக காட்சியளிக்கின்றன.
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் சராசரி நாட்களில்கூட குளிர் அதிகமாக இருக்கும். அதிலும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனிக்காலம் பிறந்துவிட்டால் ரத்தத்தை உறையவைக்கும் அளவுக்கு பனி கொட்டித் தீர்க்கும்.
அவ்வகையில், இந்த ஆண்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே பனி பெய்து வருவதால் மாநில தலைநகரான சிம்லா உள்ளிட்ட பல பகுதிகள் பனிப்போர்வையால் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிம்லாவை ஒட்டியுள்ள மலையடிவாரப் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், மரங்கள், வாகனங்கள் அனைத்தும் பனியால் மூடப்பட்டு வெண்ணிறமயமாக காட்சியளிக்கின்றன.
சாலைகளிலும் பனி உறைந்துள்ளதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பனி கொடுமைக்கு டெல்லியை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் பலியாகினர். இவர்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் இங்கு பனி தாக்கத்தால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.