எரிவாயு நிறுவன தலைவரை அடித்து விரட்ட வேண்டும்:நிமல் லங்சா

164 0

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், பதவிகளை கைவிட தயாராக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் (Negambo) நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் எரிவாயு இல்லை. மக்கள் வரிசைகளில் நிற்கின்றனர். எரிவாயுவை வீட்டுக்கு எடுத்துச் சென்றதும் வெடிக்கின்றது.

இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது லிற்ரோ (Litro Gas) நிறுவனத்தின் தலைவர் பைலா பாடுகிறார். ஊடகங்களுக்கு சென்று சிரிக்கின்றார். உண்மையில் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லை என்றால், அடித்து விரட்ட வேண்டும்.

பொறுப்பற்றவர்கள் சில நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எவராவது பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அதனை நிறைவேற்ற வேண்டும். நாங்கள் பதவிகளுக்கு பயந்து, பதவிகளை பாதுகாக்கும் நபர்கள் அல்ல.

பதவிகளை கைவிட்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம். மக்களுக்காக நாங்கள் கோரிக்கையை விடுக்கின்றோம். இதற்கு செவிசாய்க்கவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மக்களுடன் அணித்திரண்டு, அவர்களை விரட்டும் வரை பதவிகளை கைவிட நாங்கள் தயார் என்பதை கூறுகிறேன்.

முத்துராஜவெல பகுதியில் நிலங்களை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்.

எமது தீர்மானத்தை கவனத்தில் கொள்ளவில்லை என்றால், பதவி, சிறப்புரிமைகளை கைவிட்டு, வாகனங்களை ஒப்படைத்து விட்டு, மக்களுடன் இணைந்து போராடுவோம் என நிமல் லங்சா குறிப்பிட்டுள்ளார்.