தமிழகம், புதுச்சேரியில் இரவு முழுவதும் தொடர்ந்த இளைஞர்கள் போராட்டம்

264 0

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 22 மணி நேரத்திற்கு மேலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

மெரினா கடற்கையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இளைஞர்களின் வருகை அதிகரித்து வருவதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

போராட்டத்தின் நடுவே இளைஞர்களை குழுவை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், முதல்வர் நேரில் வர வேண்டும் அல்லது அறிக்கை மூலம் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனிடையே, மதுரை அலங்காநல்லூரில் இரண்டாவது நாளாக இன்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வா.உ.சி மைதானத்தில் நேற்று இரவு முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீட்டாவை தடை செய், ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓய மாட்டோம் உள்ளிட்ட முழக்கங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் இருந்தனர்.

கொட்டும் பனியிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இரவு முழுவதும் போராடி வருவதும் பெரும் தன்னெழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அதே போல் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இன்று போராட்டமானது மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.