13 ஆவது திருத்தச் சட்டத்தின் கோரிக்கை அபாயகர திசைவழி நோக்கி சர்வதேசங்களால் நகர்த்திச் செல்லப்படுகின்றது.TCC UK

157 0

தமிழீழ மக்களின் இனவழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்திலும் சுய நிர்ணயத்திற்கான அரசியற்தீர்விலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கோரிக்கை என்பது அபாயகரமான திசைவழிநோக்கி சர்வதேசங்களால் நகர்த்திச் செல்லப்படுகின்றது.

அன்புக்குரிய தமிழீழ மக்களே!

தமிழீழத்தேச விடுதலைக்காக போராடிவரும் நாம் இன்று உலக அரங்கில் எமக்கெதிராக நிகழ்த்தப்பட்டு வரும் இனவழிப்பிற்கான நீதி வேண்டிய அனைத்துலகச் சுயாதீன விசாரணைப்பொறிமுறையை வலியுறுத்தி ஐ.நா உள்ளிட்ட பொது மன்றங்களிலும் அனைத்துலக நாடுகளின் ஆட்சி அதிகார மையங்களை நோக்கியும் அறவழிப் போராட்டங்களையும் இராசதந்திர நகர்வுகளையும் முன்னகர்த்தி வருகின்றோம். சிங்கள பேரினவாத சித்தாந்தத்தின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உயிர்ப்பறிப்புக்கு எதிராகவும் தோற்றம் பெற்றதே எமது உரிமைப் போராட்டமாகும்.

போராட்டத்தின் ஆரம்பகால உலக ஒழுங்கிற்கும் பல தசாப்தங்களைக் கடந்த இன்றைய உலகநாடுகளின் கூட்டிணைவிற்கிடையில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தேறி
இருக்கின்றன. அன்றைய அமெரிக்க, சோவியத்தொன்றிய இரு துருவ அரசியல், பொருளாதார ஆதிக்கப் போட்டியில் சோவியத்தொன்றியச் சார்புநிலை நின்ற இந்திய அரசால் ஈழ தெற்காசியப் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் ஆதிக்கம் செலுத்த முற்படும் அமெரிக்காவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எமது போராட்டத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே சிறிலங்கா இந்திய ஒப்பந்தமாகும். இவ் ஒப்பந்தத்தின் புதிய சரத்துகள் 1972 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்துவந்த குடியரசு யாப்பில் உள்வாங்கப்பட்டது. 13 வது சட்டத்திருத்தமானது தமிழ் மக்களின் எவ்வித அங்கீகாரமுமின்றி இந்திய அரசின் நலன் கருதியும் சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்விலிருந்து தப்புவதற்கான தந்திரோபாய நகர்வாக உருவாக்கப்பட்டதே இவ்வரைவாகும். இதில் தமிழ்த் தேசத்திற்கான அரசியல் அதிகாரமும் பாதுகாப்பும் துளியளவும் வரையறுக்கப்படாமையால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ் அரசியற் தலைமைகளும் முற்றாக நிராகரித்திருந்தார்கள்.

எமது மக்களே! தேச விடுதலைக்காக அரசியல் அரங்கில் பணியாற்றிவரும் பணியாளர்களே! அமைப்புக்களே! இன்றைய புதிய உலக ஒழுங்கின் இயங்கியலில் இலங்கைத் தீவின் அமைவிடமும் தெற்காசியப்புவி சார் அரசியல், பொருளாதாரப் போட்டிகளும் எமது தேச விடுதலையிலும் அதிகூடிய தாக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்திய, அமெரிக்க, மேற்குலகிற்கு நிகராக சீனாவும் தனது ஆதிக்கத்தை இலங்கைத் தீவிலும் இவ் வட்டகையிலும் ஆழக்கால் பதிக்க அரசியல் சதுரங்கத்தை நகர்த்தி வருகின்றது. எமது போராட்ட வரலாற்றில் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் இனவழிப்பையும் தாங்கி நிற்கும் தமிழ்த்தேசிய இனத்தின் அதி உச்சபட்சமான அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படைக் கோட்பாட்டுடன் இனவழிப்பிற்கான நீதிப் பொறிமுறைக்கான சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை முன் நகர்த்துமாறு நாம் ஒன்றுபட்டு சர்வதேசத்தினையும் ஐ.நா மன்றத்தையும் வலியுறுத்த வேண்டும். ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதென்பது புதிதாக உருவாக்கம் பெறவுள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பை தமிழ்த் தேசம் அங்கீகரிக்கும் தோற்றத்தை உருவாக்கிவிடும் பேராபத்தை உடன் தடுத்து நிறுத்தவேண்டுமென்ற கோரிக்கையை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம். தாயகமும் புலம் பெயர் தேசமக்களும் ஒன்றுபட்டு நின்றே எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். பல்கலைக்கழக மாணவ சமூகங்களும் சமூகப்பணியாளர்களும் புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் அரசியற் செயற்பாட்டாளர்களும் குறிப்பாக பிரித்தானியத் தமிழ் அமைப்புகளும் மிகக் கனதியான அறிக்கைகளூடாக எமது அரசியற் தலைமைகளுக்கும் மக்களுக்குமான தெளிவூட்டல்களை வழங்கவேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகின்றோம்.

அன்புக்குரிய மக்களே!

எமக்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிக்காகவும் எமது அரசியற்தீர்வுக்காகவும் சமரசமின்றி நாம் தொடர்ந்து போராடுவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.