மழை பாதிப்புகளை தவிர்க்க நிரந்தர திட்டம் தேவை – ராமதாஸ்

203 0

வெள்ள நீர் வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். இதை செய்யாத வரை சென்னையில் மழை நீர் தேங்குவதை எவராலும் தடுக்க முடியாது என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரம் இப்போது மீண்டும் ஒரு பேரிடரை கடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் அனுபவிக்காத அவதிகளையும், துயரங்களையும் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் நேற்று அனுபவித்திருக்கிறார்கள். பல இடங்களில் மக்களின் சிரமங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகள் அனைத்திற்கும் மழை மீது பழி போட்டு அரசு நிர்வாகம் தப்பிக்க முடியாது.
சென்னையில் நேற்று பெய்ததை விட மிகக்கடுமையான மழைகள் பலமுறை பெய்துள்ளன. ஆனால், இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோ, சென்னையின் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டதோ கிடையாது. ஆனால், இப்போது ஏற்பட்ட அனைத்து பாதிப்பு களுக்கும் அரசு எந்திரம் செயல்படாததே காரணமாகும்.
சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலுக்கு மழை வெள்ளம் மட்டுமே காரணம் அல்ல. வாகனப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படாதது தான் மிக முக்கிய காரணம் ஆகும். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை உள்ளிட்டவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில், அவற்றை ஒட்டிய உட்புற சாலைகள் காலியாகவே இருந்தன.
அவற்றில் எந்தெந்த சாலைகள் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்றவை என்பதை அந்தந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்துக் காவலர்கள் அடையாளம் கண்டு, அந்த சாலைகளில் சிறிய வகை வாகனங்களை திருப்பி விட்டிருந்தால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
சென்னை மழை
ஆனால், அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. போக்குவரத்து நெரிசலால் திணறிய பல சாலைகளில் போக்குவரத்துக் காவலர்களையே காண முடியவில்லை. உலகின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னையில் இது போன்ற நிலை இனியும் ஏற்படக்கூடாது.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ள நீர் வடிகால்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. வெள்ள நீர் வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். இதை செய்யாத வரை சென்னையில் மழை நீர் தேங்குவதை எவராலும் தடுக்க முடியாது.
கடந்த காலங்களில் சென்னையில் தொடர்மழை பெய்யும் போது ஒரு முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் சென்னையில் நான்கு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது விரும்பத்தக்கது அல்ல. இனி இப்படி ஒரு நிலை ஏற்படாத வகையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கான நிரந்தரத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.