மீண்டும் வேகம் எடுக்கும் தொற்று- சென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா

163 0

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 130-க்கும் குறைவாக இருந்து வந்தது. மாநில அளவில் 600-க்கு குறைவாக பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த 26-ந்தேதி முதல் கொரோனாவின் தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது.

26-ந்தேதி தமிழகத்தில் 610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 171 பேருக்கு பரவியது. இது 27-ந்தேதி 172 ஆகவும், 28-ந்தேதி 194 ஆகவும் அதிகரித்தது.

மேலும் 29-ந்தேதி 294 பேருக்கு தொற்று பரவியது. நேற்று (30-ந்தேதி) 397 பேரை இது தாக்கியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 103 பேருக்கு தொற்று பரவி உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் அதிகபட்சமாக 397 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கும், கோவையில் 73 பேருக்கும் பரவியது.

கடந்த 3 நாட்களில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளை மாநகராட்சி மீண்டும் எடுக்கத் தொடங்கி உள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர். தினசரி பரிசோதனை 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் ரேண்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகமாகக் கூடக்கூடிய இடங்களில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.

திருவிழாக்கள், சமூக கூடுகைகள், பொதுக்கூட்டங்கள், இறப்பு நிகழ்ச்சி போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டில் 103 பேருக்கும், கோவையில் 73, ஈரோடு 27, காஞ்சிபுரம் 24, சேலம் 26, திருவள்ளூர் 35, திருப்பூர் 28 என பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்புபவர்களை விட தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. நேற்று 608 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆனால் 890 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக பரவி உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 6,929 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், பஸ், ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே தொற்று பரவலை தடுக்க முடியும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி கூறி உள்ளார்.

சென்னையில் தற்போது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக பரிசோனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலட்சியமாக இருக்காமல் உடனடியாக தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால் தொற்று பரவலை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.