தமிழ்நாடு அரசு பணிகளில் 100 சதவீதமும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதமும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என பா.ம.க.பொதுக்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2021-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம். 2022-ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்த சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் இன்று காலை நடந்தது.
நீட் விலக்கு சட்டத்துக்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒப்புதல் பெற்று 2022-23-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக சட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும்.
அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணிகளில் 100 சதவீதமும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதமும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும். மழை -வெள்ள பாதிப்பில் தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்.
சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்தை தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மீண்டும் திணிக்க கூடாது. பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களின் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

