கிளிநொச்சியில் மாயமான பெண்ணின் உடல் உரப்பையில்!

336 0

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் காணாமல் போயிருந்த பெண், உரப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராசேந்திரம் இராசலட்சுமி என்ற 67 வயதுப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லண்டனில் மகனுடன் தங்கியருந்த இவர் ஓரிரு வருடங்களுக்கு முன்னரே சொந்த இடம் திரும்பியிருந்தார்.

கிளிநொச்சி, உதயநகரில் இவருக்குக் காணி ஒன்று உள்ளதால், அதைப் பராமரிப்பதற்காக அம்பாள்குளத்தில் வாடகை வீட்டில் குடியிருந்தார். இவர் தனித்து வாழ்ந்த நிலையில் நேற்றுக் காணாமல் போயிருந்தார்.

நேற்றுப் பிற்பகல் 3 மணி முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலேயே அவர் காணாமல் போயுள்ளார். நேற்று அவர் வங்கிக்குச் சென்று திரும்பியிருந்தார்.

வீட்டில் இருந்தவரைக் காணவில்லை என்று வீட்டு உரிமையாளர் நேற்று மாலை 6 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

வீட்டுக்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, வீட்டில் இரத்தக்கறைகள் அவதானிக்கப்பட்டன. வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றிலும் சில சந்தேகத்துக்குரிய தடயங்கள் காணப்பட்டன. அதனால் அந்த வீடு பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உரப்பையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்
 

இந்தநிலையில், கிளிநொச்சி கந்தபுரம், முதலைப்பாலத்தில் உரப்பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் வைத்து பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் ஊகிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.