பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சமூக வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 12 நாடுகளில் மட்டுமே மிக அதிகமாக இருந்தது. எனவே அந்த நாடுகள் ஆபத்தான நாடுகள் என்றும் மற்ற நாடுகள் ஆபத்து குறைந்த நாடுகள் என்றும் வகைப்படுத்தப்பட்டன.
ஆபத்து மிகுந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் 100 சதவீதம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரேண்டம் முறையில் 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இதை 100 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதற்கான அனுமதி இன்னும் வரவில்லை.
அதற்குள் கடந்த சில நாட்களாக சமூக பரவலாக மாறி உள்ளது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. அவர் வெளிநாட்டு தொடர்பு இல்லாதவர். அவருக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை.
அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள், நர்சுகள் உள்பட 37 பேருக்கும் ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அவர்கள் குணம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. ஒமைக்ரான் வைரசும் அதில் இருந்து உருமாறியதுதான். புது வைரஸ் அல்ல.
பொதுவாக தொற்று யார் மூலம் வந்தது என்பது தெரியாவிட்டால் அதை சமூக தொற்றாக கருதுகிறோம். அப்படித்தான் இப்போதும் சில தொற்றுகள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாட்டு தொடர்பு இல்லாதவர்களிடமும் பரவல் காணப்படுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சமூக வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களிடமும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் அனைத்து பயணிகளுக்கும் சோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
ரேண்டமாக 10 சதவீதம் பேருக்கு மட்டுமே சோதிப்பதால் சோதனை செய்யப்படாதவர்கள் மூலம் தொற்று பரவலுக்கான வாய்ப்பு அதிகம்.
பொது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பதை தவிர வழியில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வருகிற 31-ந்தேதி மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடக்கிறது. அப்போது புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்- அமைச்சர் அறிவிப்பார் என்றார்.
பிரபல வைரஸ் ஆராய்ச்சியாளரான டாக்டர் பவித்ரா வெங்கடகோபாலன் கூறியதாவது:-
சமூக பரவல் என்பது நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத சூழல் அதிகரித்து வருவது ஆகியவற்றை வைத்துதான் உறுதி செய்யப்படுகிறது. இந்த இரண்டும் நம்மிடம் இருக்கிறது.
மாஸ்க் அணியும் பழக்கத்தை பலர் கைவிட்டு விட்டனர். இன்னும் தடுப்பூசி போடாதவர்களும் பலர் இருக்கிறார்கள்.
தடுப்பூசி போட்டவர்களுக்கும் தான் தொற்று ஏற்படுகிறதே என்று கேட்கலாம். அவர்களுக்கு பாதிப்பு குறைவு என்பதை உலகம் முழுவதும் நிரூபித்துள்ளனர்.
ஒமைக்ரான் தொற்றுக்கு பெரிய அளவில் அறிகுறி எதுவும் இல்லை. சிலருக்கு லேசான ஜலதோசம் மட்டுமே இருக்கிறது. தடுப்பூசி போட்டு இருந்தால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியோடு வைரஸ் போராடும்.
தடுப்பூசி போட்டு இருக்காவிட்டால் உடலில் தொற்றியதும் புதுவிதமான வைரசாக உருமாறவும் வாய்ப்பு உண்டு.
யாரிடம் தொற்று இருக்கிறது என்பது தெரியாது. எனவே மற்றவர்களுடன் பழகும் போது இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம். மாஸ்க் அணிவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இந்த பெருந்தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாது.

