ஊதிய உயர்வு – பணிநிரந்தரமின்றி தவிக்கும் அரசு பள்ளி தூய்மைப் பணியாளர்கள்

291 0

மாற்றுப் பணிக்குச் சென்றாலும் பணி நிரந்தரம் வேண்டி சிலர் பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள விருப்பம் காட்டுகின்றனர்.

உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 107 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, கட்டிடங்களைப் பராமரித்தல், கண்காணிப்பது உட்பட பல்வேறு பணிகளை ஒன்றிய நிர்வாகம் கவனித்து வருகிறது.
சுத்தப்படுத்தும் பணிக்காக தற்காலிக தூய்மைப்பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளி நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு வந்து 9 மணி வரை பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தும், மாணவர்களுக்கு குடிநீர் எடுத்து வைத்தும் செல்கின்றனர்.
அவ்வகையில் மாதம்தோறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிவோருக்கு ரூ.3ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. மாற்றுப் பணிக்குச் சென்றாலும் பணி நிரந்தரம் வேண்டி சிலர் பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள விருப்பம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து தூய்மைப்பணியாளர்கள் கூறியதாவது:
சில பள்ளிகளில், அலுவல் பணி, ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது உடன் இருந்து உதவி செய்வது, விடைத்தாள்களை முறையாகக்கட்டி எடுத்து வருவது என பல்வேறு பணிகளிலும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில தூய்மை பணியாளர்களுக்கு பணி நேரம் என வரன்முறையும் கிடையாது.
நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், கடும் நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்குவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.