தமிழகத்தில் ஒமைக்ரான் அச்சுறுத்தல்- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர்

244 0

தமிழகத்தில் ‘ஒமைக்ரான்’ பரவியது அதிகரித்து விட்டதால் இது மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது உருமாறி புதிய வகை கொரோனாவாக வேகமாக பரவி வருகிறது. ‘ஒமைக்ரான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

இங்கிலாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வந்த ‘ஒமைக்ரான்’ இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி முதல் பரவியது.

இந்த 22 நாட்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான், கேரளா, குஜராத், காஷ்மீர், ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசம், சண்டிகர், லடாக், தமிழ்நாடு என மொத்தம் 16 மாநிலங்களில் 325-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேகமாக பரவிவிட்டது.

நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஒருவருக்கு முதலில் ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நேற்று மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது. இன்னும் 23 பேர்களின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

தமிழகத்தில் ‘ஒமைக்ரான்’ பரவியது அதிகரித்து விட்டதால் இது மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பரவல் அதிகரிக்காத வகையில் அதை கட்டுப்படுத்த இப்போது தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று உயர் அதிகாரிகளை அழைத்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விரிவாக விளக்கி கூறினார்.

ஒமைக்ரான் மேலும் பரவாமல் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இன்னும் பல இடங்களில் முககவசம் அணியாமல் பலர் வருகிறார்கள். இதை கண்டறிந்து முக கவசம் அணிய வலியுறுத்த வேண்டும்.

தற்போது பண்டிகை காலம் தொடங்கிவிட்டதால் கூட்டம் அதிகம் கூடும் பகுதிகள், கடை வீதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்து ஒமைக்ரான் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என்றார்.

ஒமைக்ரான் பாதித்த நபர் எங்கெல்லாம் சென்றார் என்பதை கண்டறிந்து அந்த பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை நடந்து வந்தாலும் மாநில எல்லைகளில் இன்னும் சோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதேபோல் வருவாய்த்துறை அதிகாரி குமார் ஜெயந்த் உள்ளிட்ட அதிகாரிகளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். ஒமைக்ரானை கட்டுப்படுத்த உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். இரவுநேர ஊரடங்கையும் அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவுநேர ஊரடங்கு விதிப்பது அவசியமா? அல்லது வேண்டாமா? என்பது பற்றியும் விவாதித்தனர். வருகிற 31-ந்தேதி வரை ஏற்கனவே கொரோனா கால கட்டுப்பாடுகள் உள்ளதால் அதை அப்படியே நீட்டிப்பதற்கு பதிலாக சில கட்டுப்பாடுகளை விதித்து நீட்டிக்கலாமா? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒமைக்ரான் மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது. இது சம்பந்தமாக பல்வேறு நடைமுறைகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அரசு சார்பில் விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.