அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், மறைந்த முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 34-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இதையடுத்து அங்கு போடப்பட்டிருந்த மேடையில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் உறுதி மொழியை வாசிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் திரும்ப கூறினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவு நாளில் எடுக்கப்பட்ட உறுதி மொழி விவரம் வருமாறு:-
* அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். எதிரிகளுக்கு சிம்ம சொப்பணம், அரசியல் உலகிலே அழியாத அற்புதம், ஏழைகளுக்கு இரு விழியாக இருள் அகற்றும் சுடர் ஒளியாக வாழ்ந்தவர். வரலாறு படைத்த எம்.ஜி.ஆரின் புகழ்காக்க உறுதி ஏற்போம்.
புரட்சி தலைவர் வகுத்து தந்த பாதையிலே வீறு நடைப்போடுவோம். வெற்றி நடைபோடுவோம்.
* அராஜகத்தின் அடையாளம் தி.மு.க.வை வீழ்த்துகின்ற தெய்வசக்தி, மக்கள் வாழ்த்துகின்ற தெய்வசக்தி, எம்.ஜி.ஆரின் வழிநடப்போம். புது வரலாறு நாம் படைப்போம்.
* தி.மு.க.வை வீழ்த்த, நேர்மை என்ற வாளெடுத்தார், வாய்மை என்ற வேலெடுத்தார், அம்மா என்ற வீர மங்கையை தமிழ் மக்களுக்கு புரட்சித் தலைவர் அர்ப்பணித்தார்.
அந்த வீரத் திருமகள் வழி நடப்போம், அவர் தந்த அம்மாவின் வழி நடப்போம்.
* ஏமாற்று வேலையெல்லாம் தி.மு.க. ஆட்சியிலே, பொய்யான வாக்குறுதி தி.மு.க. ஆட்சியிலே, தவிக்கிறது, தவிக்கிறது தமிழகமே தவிக்கிறது. மீட்டெடுப்போம் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
* மக்களுக்கு நலம் தரும் ஆட்சியை, தமிழர் வாழ்வில் வளம் தரும் ஆட்சியை, மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைத்திடுவோம்.
* நீட் தேர்வு, கல்வி கடன், டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டர் மானியம், மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் எங்கே? பொங்கல் பரிசுத் தொகை எங்கே? மக்கள் கேள்விக்கு பதில் எங்கே? பதில் வராமல் விடமாட்டோம்.
* பொய் வழக்குகள் போடுவதை சட்டப்படி சந்திப்போம். வெள்ளம் போல தொண்டர் கூட்டம் அடங்கப்போவது உங்கள் ஆட்டம். செய்து முடிப்போம் என உறுதி ஏற்போம்.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருது. நமக்கு மக்கள் ஆதரவு பெருகுது. எம்.ஜி.ஆர்., அம்மா ஆசி இருக்கிறது. தொண்டர் பலம் இருக்கிறது. மக்கள் துணையும் உள்ளது. உணவை மறப்போம், உறக்கத்தை மறப்போம். உழைப்போம், ஒன்றாய் உழைப்போம். அடைவோம், வெற்றியை அடைவோம்.
* தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம். புரட்சித் தலைவர் நினைவு நாளில் நம் அம்மா மீது ஆணையாக உறுதி ஏற்போம்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, வளர்மதி, கோகுல இந்திரா, பென்ஜமின், மா.பா.பாண்டிய ராஜன், ஓ.எஸ்.மணியன், மனோஜ் பாண்டியன்.
மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, ஆதிராஜாராம், வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன், தி.நகர் சத்யா, அசோக், முன்னாள் எம்.எல்.ஏ. வி.அலெக்சாண்டர், பகுதி செயலாளர் திருமங்கலம் கே.மோகன், கொளத்தூர் கணேசன்.
மாணவரணி துணை செயலாளர் வக்கீல் ஆ.பனி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகரன், காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம், எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாநில இணை செயலாளர் டாக்டர் சுனில், துரைப்பாக்கம் டி.சி. கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர், நொளம்பூர் இமானுவேல், மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை பகுதி செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், இ.சி.சேகர், ஏ.எம்.காமராஜ், எம்.எம்.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

