ஒமைக்ரான் அச்சுறுத்தல்: ‘ஹெச்-1பி’ விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்தது அமெரிக்கா

180 0

ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தற்காலிகமாக தங்கி பணிபுரிய ஹெச்-1 பி, ஹெச்-4 விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களும் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
தற்போது ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதாலும், நேரடி சந்திப்பை அதிகாரிகள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காகவும், தற்போது உலகளாவிய பயணம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் விசாக்கள் வழங்கப்படுவதற்கான காலத்தை வெகுவாக குறைப்பதற்காகவும் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்-1பி விசா, மாணவர்களுக்கான விசா, தற்காலிக விவசாயம், விவசாயம் அல்லாத ஊழியர்கள், தடகளம், பொழுபோக்கு உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட விசாக்களுக்கு நேர்காணல் நடைமுறை தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய விசா காலாவதியான 48 மாதங்களுக்குள் அதே விசாவைப் புதுப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணலைத் தள்ளுபடி செய்வதற்கான அங்கீகாரத்தை காலவரையின்றி நீட்டித்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.