புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அதில் பிரதானமாக தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமாக அமைந்த அரசியல் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஆகவே புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாகவே அதனை நிவர்த்தி செய்ய முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு உருவாக்கம் என்றால் என்ன? எவ்வாறு? யாருக்காக என்ற தொனிப்பொருளில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நடத்திய இணையவழி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்
அவர் மேலும் கூறுகையில்,
ஒவ்வொரு அரசாங்கமும் பதவிக்கு வருகின்ற போது, மிக முக்கியமாக அரசியல் அமைப்பு திருத்தங்களை செய்வதாக வாக்குறுதியளித்தே ஆட்சிக்கு வந்துள்ளனர். 1994 ஆம் ஆண்டில் இருந்து இதனை அவதானிக்க முடிகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பது என்ற வாக்குறுதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போதும் 28 ஆண்டுகள் கடந்தும் கூட மாற்றமொன்றை அவதானிக்க முடியவில்லை. புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென 2015 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையொன்று பெறப்பட்டது. அதற்கு இணக்கம் தெரிவித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
\அதனை தயாரிக்க பாராளுமன்றமே அரசியல் அமைப்பு பேரவையாக நிறுவப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அது முழுமைப்படுத்தப்படவில்லை.
\எனினும் 2019 ஆம் ஆண்டில் அது தொடர்பான வரைபொன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதுடன் அந்த முயற்சிகள் நின்றுவிட்டன.
புதிய ஜனாதிபதியும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தே ஆட்சிக்கு வந்தார். அதன்படி 2016 ஆம் ஆண்டு நடைமுறையை பின்பற்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு, பாராளுமன்ற தேர்தல் முறைமை ஆகிய மூன்றையும் அவர் வித்தியாசமாக அணுகினார்.
அதிகார பகிர்வு என கூறாது மாகாணசபைகள் என்றார், தேர்தல் முறைமைகளை அடையாளப்படுத்தினார். நிறைவேற்று முறைமை என்று கூறினார், அதனுடன் சுயாதீன நீதித்துறை என்பதையும் ஜனாதிபதி கூறியிருந்தார். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நிபுணர்குழு நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது. ஆனால் இன்னமும் எவருக்கும் இந்த வேலைத்திட்டம் என்னவென்பது தெரியாதுள்ளது.
இந்த நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அதில் பிரதானமாக தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதுவே அத்திவாரமாக இருக்க வேண்டும். ;
ஏனென்றால் 1972,1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புகளில் தமிழ் மக்கள் பங்குபற்றியிருக்கவில்லை. அவர்களை வெளியில் அகற்றிவிட்டே இவ்விரு அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. அதன் பிரதிபலிப்பு என்னவென்பதை நாம் அனைவரும் அறிவோம்
ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதே தவிர ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமாக இருந்த அரசியல் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அதனை புதிய அரசியல் அமைப்பில் மட்டுமே நிவர்த்தி செய்ய வேண்டும்.
ஆகவே இப்போது புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்திலும் நாட்டின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதனை தீர்க்காது எந்தவொரு அரசியல் அமைப்பும் உருவாக்கப்படுவதில் அர்த்தம் இல்லை.
இந்த பிரதான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் தமிழ் தரப்பிற்கும்,சிங்கள தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணாவிட்டால் அரசியல் அமைப்பு முறைமையில் ஒரு அர்த்தமற்றதாக போய்விடும். ஏனைய விடயங்களை நாம் தெளிவாக கூறியுள்ளோம்.
1956 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் ஒரு தீர்மானமாக ஒரே நிலைப்பாட்டில் தமது வாக்குகளை அளித்துள்ளனர்.
ஆகவே அந்த ஜனநாயக நிலைப்பாட்டிற்கு மதிப்பளித்து பெரும்பான்மை சமூகம் எம்முடன் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். அதுவே அதிகார பகிர்வுக்கு ஒரு அர்த்தமுள்ளதாக அமையும். இது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளையில் அது பிற்போடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கும்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்க பணிகளை ஆரம்பிக்கும் வேளையில் இனவாதத்தை தூண்டாத வகையில் திட்டமிட்ட பரப்புரை ஒன்று மேற்கொள்ளப்படுவது அவசியமானதாகும். அதேபோல் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க பணிகளின்போது மக்களின் பிரதிநிதிகளைக்கொண்ட விசேட அமைப்பொன்றை உருவாக்குவதாக இருந்தாலும் கூட தற்போதைய அரசியல் அமைப்பின் முறைமையின் படியே அதனை செய்ய வேண்டும்.
தற்போதைய அரசியல் அமைப்பிலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாகவே சில சரத்துக்கள் மாற்றப்படலாம்.
ஆகவே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த அரசியல் அமைப்பிலேயே திருத்தம் ஒன்றை கொண்டுவர வேண்டும். அந்த திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டு அந்த திருத்தத்தின் பிரகாரம் புதிய சபையை உருவாக்குவதே முறையானது. இல்லையேல் அதுவும் அரசியல் அமைப்பை மீறிய செயற்பாடாக அமையும் பட்சத்தில் அது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையும்.
நாட்டில் அனைவருக்குமே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன, அதற்கான மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற வேகம் சகல மக்களிடத்திலும் உள்ளது. சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு அரசியல் அமைப்பு மாற்றத்தின் மூலமாகவே அமையும் என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சவால்களும் உள்ளன.
ஆனால் அதனை நாம் சரியாக காண்பிக்க வேண்டும், அவ்வாறு நாம் முன்வராத நிலையில் மக்கள் மத்தியில் தெளியு ஏற்படாது. வெறுமனே ஆட்சி மாற்றமே தீர்வு என்ற கொள்கை மாற்றப்பட வேண்டும். அதற்கு அரசியல் அமைப்பு முறைமையில் உள்ள அடிப்படை தொடர்பை மாற்றியமைக்க வேண்டும். நாட்டை நிருவகிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தீர்வாகும் என்றார்.

