15 அத்தியாவசிய பொருட்களுக்கான வற்வரியில் திருத்தம்!

331 0

ranil-prime-ministerபருப்பு, சீனி உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களிற்கான வற் வரியினைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தச் சலுகை தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கூடாக வழங்கப்படுமெனவும், இது தொடர்பில் நாளை அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வற்வரி குறைப்புச் செய்யாத வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவத்தை வழங்கும் நிகழ்வு இன்று மாலை கொழும்பு மருதானையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையினைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். எனினும் குறைக்கப்பட்ட அடிப்படையில் மக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை. இந்த விடயத்தில் வர்த்தகர்கள் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் கடன்சுமையைக் குறைப்பதற்காக வற்வரியில் மாற்றத்தைக் கொண்டுவந்தோம். இதனால் மக்களின் எதிர்ப்பினைச் சந்தித்தோம்.

எனினும், மீண்டும் மக்களுக்கு சலுகை வழங்குவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். இதனடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான வற்வரியில் திருத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதன்படி 15 அத்தியாவசியப் பொருட்களின் வற்வரி குறைக்கப்படும். இதனை நாளை அமைச்சரவையில் பேசித் தீர்மானிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.