அரசு பஸ்களில் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- சசிகலா அறிக்கை

289 0

அரசு பேருந்துகளில் பணியாற்றுபவர்களுக்கு தங்கள் பணிகளில் எத்தனையோ சிரமங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை, எளியவர்களை கனிவோடும், உரிய மரியாதை அளித்தும் நடத்த வேண்டும்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நரிக்குறவர் சோமி குடும்பத்தினரை அரசு பேருந்தில் இருந்து ஈவு, இரக்கமின்றி இறக்கிவிட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும், இவர் ஒரு மாற்றுத்திறனாளியாகவும் இருக்கிறார். நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்பதற்காக பேருந்தில் இருந்து இறக்கிவிடலாமா? இது ஒரு மனித உரிமை மீறல் செயல் ஆகும்.

இதேபோன்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக தான், செல்வமேரி என்ற மீனவ பெண் ஒருவரை குளச்சல் பேருந்து நிலையில், பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் நடந்தேறியது. செல்வமேரி போன்று எத்தனையோ பெண்கள் தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக அன்றாடம் மீன் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவர்களை போன்று வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு உதவி செய்ய மனமில்லா விட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்.

அதேபோல் 2 நாட்களுக்கு முன் விழுப்புரத்தில் ஓடும் அரசு பேருந்தில், கல்லூரி மாணவிக்கு பேருந்தின் நடத்துனரே பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு அந்த பேருந்தின் ஓட்டுனரும் உடந்தையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதுபோன்றதொரு, காட்டுமிராண்டித்தனத்தை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்காமல், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பேருந்தில் நடத்துனராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவது என்பது பொதுமக்களுக்கு ஆற்றுகின்ற தன்னலமற்ற ஒரு சேவையாகும். எத்தனையோ பேர் சிறப்பாக சேவை மனப்பான்மையோடு பணியாற்றுவதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஒரு சிலர் செய்கின்ற தவறுகளால் அனைவரையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.

அரசு பேருந்துகளில் பணியாற்றுபவர்களுக்கு தங்கள் பணிகளில் எத்தனையோ சிரமங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை, எளியவர்களை கனிவோடும், உரிய மரியாதை அளித்தும் நடத்த வேண்டும்.

இதுபோன்று தவறு செய்பவர்களை கண்டறிந்து, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள், அரசு பேருந்துகளில் அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் செய்கின்ற நிலையை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.