முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் உத்தியோகத்தர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? ; ஜனாதிபதி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தக்க வைப்பதற்காகவா என கொழும்பு பேராயர் இல்லத்தின் பொது மக்கள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த கேள்வி எழுப்பினார்.
2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலை தடுக்காதிருந்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடி பொறுப்பை ஏற்க வேண்டும் என சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரான ; பிரசன்ன ரணதுங்க பொறுப்புடன் கூறிக்கொள்வதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களம் விரைந்து செயற்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சரான பிரசன்ன ரணதுங்க உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் குறித்து தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் ஆராயுமாறு கோரி குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் எழுத்து மூல ஆவணமொன்றை சமர்ப்பிப்பதற்காக, கொழும்பு மறை மாவட்ட அருட் தந்தையர்கள் குழுவொன்று நேற்றைய தினம் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்றிருந்தபோதே, அருட் தந்தை கிரிஷாந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
பிரசன்ன ரணதுங்க என்பவர் அமைச்சரவை அந்தஸ்துடைய ஒருவர். அவரின் கருத்துக்களை எளிதாக விட்டு விட முடியாது. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடி பொறுப்பை ஏற்க வேண்டும் என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையை இலகுவானதொரு விடயமாக பார்க்க முடியாது. அவரின் கருத்து தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆராய வேண்டும்
<p>தன்னிடம் ஏதேனும் ஆதாரங்களின்றி அவ்வாறானதொரு கருத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடகங்களிடம் கூறியிருக்க மாட்டார் என்பதை நாம் வலுவாக நம்புகிறோம்
2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. நூற்றுக் கணக்கானோர் பலியானதுடன், இன்னும் பலர் வாழ் நாள் வரையிலும் படுத்த படுக்கை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் பலர், படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கத்தோலிக்க தேவாலயங்களை இலக்கு வைத்து தீவிரவாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தேவாலங்களை இலக்கு வைத்து உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் இடம்பெறப்போவதான புலனாய்வுத் தகவல்கள், ; இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டிய அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் மற்றும் உயர் அரசியல் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளபோதிலும், மேற்குறிப்பிட்ட தரப்பினர், தாக்குதலை தடுப்பதற்கான முறையான செயற்பாடுகளை செய்யாமை அல்லது தவறியமை அல்லது கடமையிலிருந்து தவறிய‍மை ஆகிய விடயங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆனைக்குழு அறிக்கையின் 295 ஆம், 296 ஆம் பக்கங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் உத்தியோகத்தர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிகை எடுக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அவர்களுக்கு எதிராக தமது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தக்க வைப்பதற்காகவா ஜனாதிபதி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்” என கேள்வி எழுப்பினார்.

