மகாகவி பாரதியார் 140-வது பிறந்த நாள் விழா – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

338 0

பாரதியார் மறைந்து நூறாண்டு ஆனாலும் அவரது கவிதை நெருப்பும், கருத்து நெருப்பும் இன்றும் கனன்று கொண்டே தான் இருக்கின்றன என ராமதாஸ் கூறியுள்ளார்.

மகாகவி பாரதியார் 140-வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அரசு சார்பில் சென்னையிலும் எட்டையபுரத்திலும் விழாக்கள் நடத்தப்பட்டன.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:-

எட்டயபுரத்தில் பிறந்து எட்ட முடியாத உயரங்களைத் தொட்ட பாரதியாரின் 140-வது பிறந்தநாள் இன்று. தேச விடுதலை, பெண் விடுதலை, கல்வி, விளையாட்டு என அத்தனை குறித்தும் தொலைநோக்கு கொண்டிருந்த மாமனிதன். அவரது பிறந்தநாளில் நினைவு கூறுவது நமக்கு பெருமை!

பாரதியார் மறைந்து நூறாண்டு ஆனாலும் அவரது கவிதை நெருப்பும், கருத்து நெருப்பும் இன்றும் கனன்று கொண்டே தான் இருக்கின்றன. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அவரது எழுத்துகளைத் தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. வெல்க பாரதியார்…. நனவாகட்டும் அவரது கனவுகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியிருப்பதாவது:-

கேட்கும்போதே உணர்வூட்டும் ஒப்பற்ற கவிதைகளைப் படைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள் இன்று. தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ்மொழி மீது மாளாத பற்று என தனித்துவ கவிஞராக திகழ்ந்த அந்த மகாகவிஞனை ஒவ்வொரு கணமும் போற்றி கொண்டாடிடுவோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:-

காலத்தின் இயக்கத்தை வென்று, நிலை நிறுத்தி விடுகிற வல்லமையைத் தன் கவிதைகளாலும் அரசியல் கருத்துகளாலும் அடைந்தவர் என் பிரிய மகாகவி பாரதி. பிறந்தநாள் வணக்கங்கள்.

இவ்வாறு அதில் உள்ளார்.