தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

241 0

201701160834414626_Tuticorin-Thermal-Power-Station-420-MW-Electricity_SECVPFதாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாததால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 மின் உற்பத்தி எந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 எந்திரங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த எந்திரங்களை நிறுவி அதிக நாட்கள் ஆகிவிட்டது. எனவே எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

தற்போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வற்றாத ஜீவநதி என்ற சிறப்பை பெற்ற தாமிரபரணி ஆறு கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டில் வற்றிவிட்டது. ஓடை போல் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

ஆற்றில் உள்ள உறைகிணறுகளுக்கே தண்ணீர் செல்லாததால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலைய தேவைக்கும் தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது.

அனல்மின் நிலையத்தில் ஏற்கனவே கையிருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு கடந்த ஒரு வாரமாக அனல்மின்நிலையம் இயங்கி வந்தது. தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டதாலும், நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையையொட்டி பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்ததால் மின்சார தேவை குறைந்ததாலும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 2 மின் உற்பத்தி எந்திரங்களை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 1, 2-வது மின்சார உற்பத்தி எந்திரங்கள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின்தேவை அதிகரிக்கும் போது இந்த 2 எந்திரங்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.